கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 23-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் / Huge employment camp to be held in Coimbatore on August 23rd
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஆகஸ்ட் 23-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 250 மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதன் மூலம் சுமார் 15,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. பொறியியல் சார்ந்த நிறுவனங்கள், செவிலியர், டெய்லர், ஓட்டுநர், டெக்னீஷியன், அலுவலக வேலைகள், ஐடி உள்ளிட்ட பல்வேறு விதமான பணி வாய்ப்புகள் உண்டாகி தரப்படுகிறது.
கோயம்புத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 23.08.2025 சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொள்ளாச்சி ரோடு, ஈச்சானாரி, கோவையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது.
250 நிறுவனங்கள் பங்கேற்பு
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 250-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் 15,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நிறுவனங்கள் ஆட்களை தெரிவு செய்ய உள்ளனர்.
கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்களும் இந்த முகாமில் கலந்துகொள்ள உள்ளனர். இப்பகுதியை சேரந்த இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும்.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள தகுதிகள் என்ன?
கோயம்புத்தூரில் நடைபெறும் இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்து வேலை தேடுபவர்களும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர சேவைகள்
மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதன் மூலம் வெளிநாடு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு மூலமே பெற முடியும்.
அதே போன்று, இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு செய்து தரப்படும். நான் முதல்வன், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பல்வேறு திறன் வளர்ச்சி பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இப்பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.