அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி. ரூ.1,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவிப்பு / NEET coaching for government school students. Announcement of Rs. 1,000 stipend
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சகண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் ; உயர் கல்விக்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களில் இருந்து உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு மாணவர்களின் உயர்கல்வி விருப்பத்துக்கு ஏற்ப சனிக்கிழமைகளில் உரிய பயிற்சிகள் வழங்கப்படும். அதில் உயர்கல்வி சேர்க்கைக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களைப் பெறலாம். இந்த மையங்களில் பயிற்சி தர முதுநிலைப் பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும். அதேபோல், பயிற்சிகள் தடையின்றி நடைபெறும் வகையில், சார்ந்த வட்டாரத்தின் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வாரமும் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.