நர்சிங் முடித்தவர்களுக்கு 2,240 கிராம செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் / 2,240 village nurse posts to be filled soon for nursing graduates
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதாவில் கவர்னர் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களைச் சரிசெய்து, அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துள்ளதால் 2,240 கிராம சுகாதார செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” தமிழ்நாடு முழுவதும் வாரா வாரம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 1 கோடியே 60 லட்சம்*செலவில் புனரமைக்கப்பட்ட மருந்து செய் நிலையம் (Pharmacy) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மா.சுப்பிரமணியன்
1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் புகழ்பெற்ற சித்த மருத்துவக் கல்லூரி, 60 ஆண்டுகளை நிறைவு செய்து வைர விழா கொண்டாடுகிறது. இந்த சித்த மருத்துவக் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக 25 ஏக்கர் நிலம் வேண்டும் என்று நிர்வாகம் சார்பில் கேட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். ஏற்கனவே அரசுக்குச் சொந்தமான கூடுதலாக உள்ள ஐந்தாறு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்திய அளவில் முதலிடம்
அதில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து, உரிய நிர்வாக அனுமதியுடன் சித்த மருத்துவக் கல்லூரிக்கு பெற்றுத் தரப்படும். இந்த பணி விரைந்து செயல்படுத்தப்படும். பாளையங்கோட்டையில் இன்று கூட ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த பிறகு, இது 494-வது உடல் உறுப்பு தானமாகும். இந்தத் திட்டம் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதுடன், உலக அளவில் முதலிடம் பெறும் வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
சித்த பல்கலைக்கழகம்
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, முதலமைச்சர் அவர்கள் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்று அறிவித்து, சட்ட முன்வடிவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அந்த மசோதா நான்கு, ஐந்து முறை சில திருத்தங்களுக்காகத் திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 21ஆம் தேதி, கவர்னர் மீண்டும் ஒரு நான்கு திருத்தங்களுடன் மசோதாவைத் திருப்பி அனுப்பி உள்ளார். அந்தக் கடிதம், தற்போது சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் திருத்தங்கள் சரிசெய்யப்பட்டு, எப்போது சட்டமன்றம் கூடினாலும் இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.
செவிலியர்கள் பணியிடங்கள்
2,240 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடியதன் விளைவாக, கடந்த வாரம் அந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். தீர்ப்பு வந்தவுடன் 2,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு முதலமைச்சர் அவர்களால் பணி ஆணைகள் வழங்கப்படும். நேற்று கூட 644 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம். நான்கு மாதங்களுக்கு முன்பு 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன.” என்றார்.