தொழில் முனைவோர்களுக்கான 3 நாள் ட்ரோன் பயிற்சி – செப். 9ல் சென்னையில் தொடக்கம் / 3-day drone training for entrepreneurs – starts in Chennai on Sept. 9
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ட்ரோன் பயிற்சி வரும் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 11 வரை சென்னையில் நடைபெற உள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் ட்ரோன் பயிற்சி அளிக்கவுள்ளது. செப்டம்பர் 9ம் முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை மூன்று நாள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில், ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விமானம் இயக்கும் அடிப்படைகள் குறித்த கண்ணோட்டம் வழங்கப்படும். மேலும், ட்ரோன்களின் வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், பராமரிப்பு முறைகள், அவசர நிலைக் கருவிகள், சிமுலேட்டர் (Simulator) பயிற்சி மற்றும் நடைமுறைப் பயிற்சி, அசெம்பிளிங் (Assembling), ப்ளைட் கன்ட்ரோலர் (Flight Controller)மற்றும் சென்சார் அளவுத்திருத்தம், கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு, ACT மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்ற தொழில்நுட்பங்கள் பயிற்சியில் இடம்பெறும். மேலும், அரசு வழங்கும் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-வது வகுப்புடன் விண்ணப் பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி ஒதுக்கப்படவுள்ளது. தேவைப்படுவோர் அதற்கும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவு செய்ய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, கைபேசி எண்கள். முன்பதிவு அவசியம்: 95437 73337 / 93602 21280′ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.