‘School of Semiconductor’ – செமிகண்டக்டர் பயிற்சி அளிக்க ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்துள்ளது தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு செமிகண்டக்டர் 2030 திட்டத்தின் ஒரு அங்கமாக இத்துறைக்கு தேவையான திறன் மிக்க பணியாளர்களை உருவாக்கும் வகையில் ‘ செமிகண்டக்டர் பள்ளி’ (School of Semiconductor) அமைக்கப்படும், என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன் கீழ், மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களுக்கான மையம் அமைக்கப்பட உள்ளது.
செமிகண்டக்டர் புதுமையாக்கம் மற்றும் உற்பத்தி ஆகிய வளர்ந்து வரும் துறைகளை தமிழ்நாட்டை தேசிய மற்றும் சர்வதேச மையமாக மாற்றும் நோக்கத்தோடு, பட்ஜெட்டில் தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன் 2030 தொலைநோக்கி திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம், சிப் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் செமிகண்டக்டர் சிப்களை வடிவமைக்கவும், உற்பத்தி செய்யவும் மாநிலத்தை முன்னிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய மற்றும் சர்வதேச தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ற திறன் மிக்க ஊழியர்களை தயார் செய்வதில் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் முதல் முன்னெடுப்பாக, திறன்மிக்க பணியாளர் உருவாக்க முயற்சிக்கான நடவடிக்கையாக செமிகண்டக்டர் பள்ளி (ஸ்கூல் ஆப் செமிகண்டக்டர்) அமைக்கப்படும், என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன் படி, மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களுக்கான மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையம் அதி நவீன சிப் உருவாக்க வசதி கொண்டிருக்கும். ஐஐடி மெட்ராஸ் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இது மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மையத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த மையம், ஆய்வு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு, தொழில்நுட்ப உள்ளூர்மயம், முன்னோட்ட வடிவம், ஸ்டார்ட் அப் இன்குபேஷன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மேலும், மத்திய மின்னணு மற்றும், தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து செயல்வடுவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்படும். இந்த மையம் சென்னை சிபிடி வளாக்கத்திம் அமைய உள்ளது. இதில் 2-6 வார பயிற்சி திட்டங்களில் 4500 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.”இந்த முயற்சி செமிகண்டக்டர் துறைக்கு தேவையான திறன் மிக்க மனித வளத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது,“ என்று மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.