ரத்தினம் கல்லூரியில் ஆகஸ்ட் 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் / Private employment camp on August 23 at Rathinam College
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈச்சனாரி, பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில், கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து உற்பத்தித் துறை, ஜவுளித் துறை, பொறியியல், கட்டுமானம், ஐ.டி. துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத் துறை, மருத்துவம் என 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
8-ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயின்றவா்கள், செவிலியா்கள், பொறியியல் மாணவா்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.
முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம். முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் தோ்வுசெய்யப்படும் தோ்வா்களுக்கு, பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
வேலை தேடுவோா் மேலும் விவரங்களுக்கு 0422 – 2642388, 9499055937 என்ற எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

