தமிழ்நாட்டு பள்ளிகளில் வருகிறது.. ஓபன் புக் தேர்வு முறை.. Open Book Exam என்றால் என்ன? / Open Book Exam System is coming to Tamil Nadu schools.. What is Open Book Exam?
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
இதில் ஓபன் புக் தேர்வு முறை எனப்படும் திறந்த புத்தகத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை, மாநிலத்தின் கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற நீதிபதி டி. முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முக்கியப் பணி, தமிழ்நாட்டுக்கான ஒரு தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்குவதாகும். கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணிகளில், பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் துணைவேந்தர்கள், அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் உள்ள நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை
இந்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், தற்போது மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலக் கல்விக்கொள்கை (SEP) தமிழ்நாட்டின் தனித்தன்மையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “இந்தக் கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை விட, சிந்தித்துப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். உடற்கல்வி படிப்போடு இணைந்திருக்கும். முக்கியமாக, நாங்கள் இருமொழிக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவோம், இது எங்கள் உறுதியான கொள்கை என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
புதிய மாநிலக் கல்விக்கொள்கையின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். “கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போகிறோம். எல்லோருக்கும் கல்வி அளிப்பதே எங்கள் நோக்கம். யாரும் பின்தங்கக் கூடாது” என்று கூறிய ஸ்டாலின், கல்வியில் பகுத்தறிவைப் போதிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் திறந்த புத்தகத் தேர்வு முறை
இதில் ஓபன் புக் தேர்வு முறை எனப்படும் திறந்த புத்தகத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை, மாநிலத்தின் கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கை, திறந்த புத்தகத் தேர்வுகளை பள்ளிக்கல்வியில் ஒரு அம்சமாக கொண்டு வர பரிந்துரைத்துள்ளது. இது வெறும் மனப்பாடம் செய்வதைக் குறைத்து, புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கமான தேர்வுகளில் கூட, மாணவர்கள் தரவு மற்றும் சூத்திரங்களுக்கான தகவல் தாள்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களிடம் தேர்விற்கு என்று தனி reference புத்தகம் ஒன்று வழங்கப்படும். அதை பார்த்து, புரிந்து தேர்வு எழுத முடியும்.
திறந்த புத்தகத் தேர்வு என்றால் என்ன?
இந்தத் தேர்வு முறையில், மாணவர்கள் தேர்வு எழுதும்போது பாடப்புத்தகங்கள், குறிப்புகள் அல்லது பிற அனுமதிக்கப்பட்ட புத்தக குறிப்புகளை தேர்வு எழுத பயன்படுத்தலாம். இதன் முதன்மை நோக்கம் தகவல்களை மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி, அவற்றை திறம்பட கண்டறிந்து, புரிந்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்துவதாகும். கேட்க எளிதாக இருந்தாலும் இதை செய்வது கடினம்.. அதோடு இது மனப்பாடத்தை நம்பாமல் புரிந்து படிக்க உதவும்.
இந்தத் திட்டத்தின் நன்மைகள்
இது நீண்டகால புரிதலை ஊக்குவிக்கிறது. மனப்பாடம் செய்யும் முறையை இது குறைக்கிறது. தேர்வு சார்ந்த மன அழுத்தத்தைக் குறைத்து, விமர்சன சிந்தனை மற்றும் பகுப்பாய்வு திறன்களை வளர்க்கிறது. மேலும், இது ஒரு பாடத்தை ஏன் படிக்கிறோம் என்று புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
திறந்த புத்தக தேர்வில் உள்ள சவால்கள்
ஆனால் இதில் சவால்களும் உள்ளன. மனப்பாடம் செய்வதைத் தாண்டிய கேள்விகளை உருவாக்குவதற்கு ஆசிரியர்களுக்கு குறிப்பிடத்தக்க பயிற்சி தேவை. கேள்விகள் நேரடியாக இல்லாமல்.. ஆய்வு செய்யும் வகையில் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களது புத்தகங்களை, ரெபரென்ஸ்களை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு நன்கு அறிந்திருக்க வேண்டும். பெரிய அளவில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முறையான ஆசிரியர் பயிற்சி, தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் பாடத்திட்ட மாற்றங்கள் அவசியமாகும்.