வங்கிக் கடன் வாங்க சிபில் ஸ்கோர் அவசியமில்லை / CIBIL score is not necessary to get a bank loan
CIBIL Score Bank Loan: சிபில் ஸ்கோரை தவிர்த்து மற்ற காரணிகளை கொண்டும், பயனர்களுக்கு வங்கிகள் முதல் கடனை வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிபில் ஸ்கோர் – மத்திய அரசு விளக்கம்
வங்கிகளில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோரின் கட்டாயம் மற்றும் அவசியத்தன்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக கடந்த வாரம் பதில் அளித்துள்ளது. அதில், வங்கிகளால் சிபில் ஸ்கோர் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் CIBIL ஸ்கோரின் நிலை மற்றும் அங்கீகாரம்”குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி, முதல்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு சிபில் ஸ்கோர் அவசியானது இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனரின் மதிப்பை காண உதவும் சிபில் ஸ்கோர்
மத்திய அரசின் விளக்கத்தின்படி, பயனரின் பல்வேறு தகவல்கள் அடிப்படையில் அவரது பணத்தை திருப்பி செலுத்தும் திறனை வங்கிகள் உறுதி செய்யலாம். குறிப்பாக கடந்த காலத்தில் திருப்பி செலுத்தும் வரலாறு, தாமதமாக திருப்பி செலுத்திய விவரங்கள், கடன் அடைக்கப்பட்டது, மறுவடிவாக்கம் செய்யப்பட்டது மற்றும் எழுதிக் கொடுத்தது ஆகியவை இதில் அடங்கும். இது அனைத்திற்கும் மேலாகவே ஒரு நபரின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனுக்கு சிபில் ஸ்கோர் பரிசீலிக்கப்படுகிறது.
சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் வாங்க முடியுமா?
கடன் விண்ணப்பங்களை வங்கிகள் ஏற்றுக்கொள்ள, குறைந்தபட்ச சிபிஎல் ஸ்கோர் என ரிசர்வ் வங்கி எதையும் நிர்ணயிக்கவில்லை. கடன் வழங்குநர்கள் தங்கள் வணிகக் கருத்தாய்வுகள், வாரியக் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்கள். இதுபோக, கடந்த ஜனவரி 2025 தேதியிட்ட ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, முதல் முறையாக கடன் வாங்குபவர்களின் கடன் விண்ணப்பங்கள் “கடன் வரலாறு இல்லை என்பதற்காக நிராகரிக்கப்படக்கூடாது. அதாவது பயனர் முதல்முறையாக கடன் வாங்குவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபில் ஸ்கோருக்கு எவ்வளவு கட்டணம்?
தனிநபர் ஒருவர் தனது சிபில் ஸ்கோர் குறித்த விவரங்களை அறிய, வங்கிகள் 100 ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி விதிகளை வகுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு, கடந்த 2016ம் ஆண்டு ஆர்பிஐ வெளியிட்ட சுற்றறிக்கையில், “ தங்களிடம் கடன் வரலாறு உள்ள பயனர்களுக்கு, வருடத்திற்கு ஒரு முறை, மின்னணு வடிவத்தில் சிபில் ஸ்கோட் உட்பட ஒரு இலவச முழு கடன் அறிக்கையை வழங்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபில் ஸ்கோரின் செயல்பாடு என்ன?
டிரான்ஸ்யூனியன் சிபில் (CIBIL), அதாவது கடன் தகவல் பணியகம் ஆனது, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 2005 (சிஐசிஆர்ஏ) மற்றும் சிஐசி விதிமுறைகள், 2006 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் ஒரு கடன் வழங்கும் நிறுவனம் ஆகும். இது இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) கட்டுப்படுத்தப்படுகிறது. அனைத்து கடன் வழங்குநர்களின் செயல்பாடுகள் தொடர்பான கொள்கையை தீர்மானிக்க மத்திய வங்கிக்கு அதிகாரம் உள்ளது, அத்தகைய நிறுவனங்கள் சிபிஎல் நிறுவன முடிவுகளுக்குக் கட்டுப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சிபில் அரசுடன் இணைக்கப்படுகிறதா?
கடந்த 2024ம் ஆண்டு பட்ஜெட்டில், நிதித் தகவல்களின் மையக் களஞ்சியமாக தேசிய நிதித் தகவல் பதிவேடு (NFIR) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் சிபில் அமைப்பையும் அரசு இயந்திரத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.