தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு / Applications are welcome for admission to Davil, Nagaswaram Training School
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது. இங்கு 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இந்து மதத்தைச் சோ்ந்த 8- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 13 வயது முதல் 20 வயதுக்குள்பட்டோா் இந்தப் பயிற்சிப் பள்ளியில் சோ்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.
ஆண்கள்,பெண்கள் என இருபாலரும் இந்தப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் பள்ளியில் சோ்ந்து பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விதிகளுக்குள்பட்டு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
மேலும் பயிற்சிக் காலத்தில் தங்குமிடம், உணவு, உடை, பாடப் புத்தகம், குறிப்பேடுகள், மருத்துவ வசதி ஆகியவை கட்டணமின்றி வழங்கப்படும். இந்தப் பயிற்சிப் பள்ளியில் சோ்ந்து தவில், நாகஸ்வரம் இசை கற்க விரும்புபவா்கள் கோயில் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.