வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை / Student admission in Vadapalani Murugan Temple Odhuvar Training School
வடபழனி முருகன் கோயிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் பகுதிநேர வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்கு அக்.13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முருகன் கோயில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக சென்னை வடபழனியில் அமைந்துள்ள முருகன் கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் திகழ்கிறது.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சட்டப்பிரிவு, 46(3)ன் கீழ் பட்டியலை சேர்ந்தது. துணை ஆணையர், செயல் அலுவலர் நிலையிலும், தக்காராலும் நிர்வாகம் கவனித்து வரப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் இந்த நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு படி, திருமுறைகளை குறைவின்றி ஓதிட ஏதுவாக இக்கோயிலில் புதியதாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி பகுதி நேர வகுப்பாக தொடங்கப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயிற்சி காலம் நான்கு ஆண்டுகள். பகுதி நேர வகுப்புகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை அல்லது இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநேர வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு 14 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்த
பட்சம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓதுவார் பயிற்சி பெற விரும்புவோர் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் படிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும், ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இயற்கையாகவே சாரீரமும், உடல் வளமும் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரை கொண்டு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோர் வடபழனி முருகன் கோயிலில் நேரிலோ, இந்து சமய அறநிலையத்துறையின் www.tnhrce.gov.in மற்றும் www.vadapalaniandavar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் வரும் அக்.13-ம் தேதிக்குள் துணை ஆணையர்/ செயல் அலுவலர், வடபழனி முருகன் கோயில், வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.