மோந்தா புயல்: 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – Cyclone Mondha
வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11: 30 மணியளவில் (அக். 26) ‘மோந்தா’ புயலாக உருமாறி வலுவடைந்தது.
இது, அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு, தென்மேற்கிலும் , சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 560 கி.மீ., தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து, தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது.
மோந்தா புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. பின்னா், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகில் தீவிர புயலாக செவ்வாய்க்கிழமை (அக். 28) கரையைக் கடக்கக்கூடும்.
அந்த நேரத்தில் காற்று 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக திங்கள்கிழமை முதல் நவ. 2-ஆம் தேதி வரை வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் மோந்தா புயல் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் 2- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

