Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆட்சியில் உரிமைத்தொகை ரூ.2000ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு இன்று காலையிலேயே அவரவர் வங்கி கணக்கில் 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதால் இல்லத்தரசிகள் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக இன்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில்: மிக மிக முக்கியமான விஷயத்துக்காகத்தான் இந்தக் காணொலி! இன்றைக்குக் காலையில், நம் அரசு சார்பில் 5 ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் வந்திருக்கும். எதற்காக இந்தப் பணம்? நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதைச் சமாளித்து மக்களின் உயிரைக் காத்தது மட்டுமல்ல, அவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வழங்கினோம். சென்ற ஆட்சி விட்டுவிட்டுப் போன கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஆட்சிக்கு வந்ததுமே பல திட்டங்களை நிறைவேற்றினோம். நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன்.

