ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி / Skill training for Adi Dravidian and tribal youth
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து சூரிய மின் பலகை (சோலார் பேனல்) பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் சேர 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி காலம் 45 நாட்கள்.
பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
சுயதொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

