பகுதிநேர ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக கலை, பண்பாட்டு துறையின்கீழ், இக்கல்லுாரி மாமல்லபுரத்தில் இயங்கி வருகிறது. மரபு கட்டடக்கலை, கல், உலோகம், மரம், சுதை ஆகிய சிற்பக்கலைகள், வண்ணக்கலை ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இக்கலைகள் பயில்வதற்கு ஆர்வமுடன் ஏராளமானோர் சேர்வதால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பயிற்றுனர் ஆசிரியர்கள் ஓய்வுபெற்று, பல்வேறு பாடப் பிரிவுகளில், பல ஆண்டுகளாக காலி பணியிடங்கள் உள்ளன.இதனால், கலைகளில் முறையாக மற்றும் குறித்த காலத்தில் பயிற்சி பெற இயலாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஆசிரியர்களை நியமிக்கக்கோரி, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், 15,000 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்க அறிவித்து, ஊதிய குறைவால், யாரும் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டவில்லை.இதையடுத்து, 2023 – 24ம் ஆண்டில், 20,000 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், ஆறு ஆசிரியர்களை நியமிக்க, அத்துறை அரசாணை வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, தமிழ்மொழி, கல், உலோகம், சுதை, மரம் ஆகிய சிற்பக் கலைகள், மரபு வண்ணக்கலை பாடப்பிரிவுகளில், தலா ஒரு பகுதிநேர ஆசிரியரை நியமிக்க, விண்ணப்பம் வரவேற்பதாக, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழ் மொழியில், முதுகலையில் முதல் வகுப்பு மற்றும் கலை படிப்புகளில் பி.எஸ்சி., பி.எப்.ஏ., பட்டங்களில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்குமாறும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.