இந்திய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ChatGPT பயிற்சி – ஐஐடி மெட்ராஸ், கல்வி நிறுவனங்களுடன் இணைந்தது OpenAI / ChatGPT training for Indian teachers, students – OpenAI partners with IIT Madras, educational institutions
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ஓபன்ஏஐ’ (OpenAI), ‘இந்திய முதன்மை’ நோக்குடன் கல்வித் துறையை மேம்படுத்தும் புதிய முயற்சியை திங்கட்கிழமை அறிவித்தது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், கல்வியாளர்களுக்கு AI கருவிகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு அதிகாரமளிப்பதாகும்.இதன் ஓர் அங்கமாக, ஓபன்ஏஐ மற்றும் ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் இடையே புதிய ஆராய்ச்சி ஒத்துழைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பிற்காக, ChatGPT உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்திமிடமிருந்து $500,000 (சுமார் ₹4.15 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மன் அடுத்த மாதம் இந்தியா வரவிருக்கிறார். ஓபன்ஏஐ தனது முதலாவது இந்தியா அலுவலகத்தை டெல்லியில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐஐடி மெட்ராஸ், அறிதல் குறித்த நரம்பு அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், AI கற்றல் விளைவுகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதைக் குறித்த நீண்டகால ஆய்வுகளை நடத்தும். இந்தக் கண்டுப்பிடிப்புகள் வெளிப்படையாகப் பகிரபட்டு எதிர்காலத் தயாரிப்புகளுக்குரிய தகவல்களை அளிக்கும்.
உலகளவில் ChatGPT-யைப் பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் ஆசிய-பசிபிக் பகுதியில் கல்வித் துறையில் AI வாய்ப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், ஓபன்ஏஐ ராகவ் குப்தாவை இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் பிராந்திய கல்வித் தலைவராக நியமித்துள்ளது. கல்வி மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப துறையில் 20 வருட அனுபவமுள்ள குப்தா, சமீபத்தில் Coursera நிறுவனத்தில் இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் பிராந்திய இயக்குநராக இருந்தார்.அடுத்த ஆறு மாதங்களில், இந்தியா முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஐந்து லட்சம் ChatGPT அனுமதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்க ஓபன்ஏஐ திட்டமிட்டுள்ளது. இது, இந்திய கல்வி அமைச்சகம் (MoE), அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (AICTE) மற்றும் ARISE உறுப்பினர் பள்ளிகள் உள்ளிட்ட கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
AI தாக்க உச்சி மாநாட்டின் கீழ், துவங்கப்பட்டுள்ள ஓபன் ஏஐ லேர்னிங் ஆக்சிலரேட்டர் (OpenAI Learning Accelerator) இந்தியா-முதன்மை முயற்சியாக செயல்பட்டு, AI ஆய்வு, பயிற்சி மற்றும் பயன்பாட்டின் வாயிலாக கல்வியில் புதிய பரிமாணங்களை உருவாக்கும், என நிறுவனம் தெரிவித்தது.
ஐஐடி மெட்ராஸும் ஓபன்ஏஐ-யும் புதிய ஆராய்ச்சி கூட்டுறவைத் தொடங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பிற்கு ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து $500,000 (சுமார் ₹4.15 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”மனிதர்களுக்கு ஏஜிஐ (AGI – General Artificial Intelligence) பயன்பட வேண்டும் என்பதே ஓபன்ஏஐ-யின் முக்கியக் குறிக்கோளாக இருக்கின்றது. அந்த நோக்கத்திற்காகவே, எங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து ‘OpenAI Learning Accelerator’ திட்டத்தை தொடங்குவது, இந்தியாவின் கல்வி சூழலுக்கான ஓபன்ஏஐயின் இதுவரையிலான மிக முக்கிய முதலீடுகளில் ஒன்றாகும்,” என ஓபன்ஏஐ நிறுவனத்தின் கல்வித்துறை துணைத் தலைவர் லீயா பெல்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான், ChatGPT Go என்ற புதிய சந்தா திட்டத்தை அறிவித்தது. அதிக மெசேஜ்கள், இமேஜ் உருவாக்கம், ஃபைல் பதிவேற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ரூ.399 சந்தா திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ChatGPT சந்தாக்களையும் UPI மூலம் செலுத்த முடியும் என்றும் நிறுவனம் அறிவித்தது, இது இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள் OpenAI இன் மேம்பட்ட AI கருவிகளை அணுகுவதை எளிதாக்கும்.