ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, சென்சார் சோதனை பயிற்சி – தாட்கோ / Drone production and sensor testing training for Adi Dravidian and tribal youth – TAHDCO
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டதாரிகளுக்கும், டிப்ளமா முடித்தோருக்கும் ட்ரோன் தயாரிப்பு, எம்பெட்டெட் சென்சார் சோதனை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மேலாண் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாட்கோ நிறுவனம், சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெட் டெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் ஆகிய பயிற்சிகளை அளிக்க உள்ளது.
ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், எம்பெட்டெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, பொறியியலில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட பயிற்சிக்கான அனைத்து செலவினங்களும் தாட்கோ மூலமாக வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்பும் தகுதியுள்ள ஆதி திராவிடர்-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தின் (www.tahdco.com) மூலம் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.