Sat. Aug 30th, 2025

வைணவ கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்- தகுதி, விண்ணப்பிப்பது எப்படி? / Free spiritual journey to Vaishnava temples – eligibility, how to apply?

வைணவ கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்- தகுதி, விண்ணப்பிப்பது எப்படி? / Free spiritual journey to Vaishnava temples – eligibility, how to apply?

ஆண்டுதோறும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, தகுதிவாய்ந்த 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்களை தேர்வு செய்து கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணம் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2000 பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர். கடந்த ஆண்டு 1000 பக்தர்கள் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் இந்தாண்டு முதல் 2000 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அந்த வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும், இராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

அம்மன் கோவில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும் ஆன்மீக பயணம் முடிவடைந்த நிலையில் தற்போது புரட்டாசி மாதத்தில் தொடங்கவிருக்கும் வைணவ கோவில்களுக்கான ஆன்மிக பயணத்திற்கு தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தாண்டு (2025) 4 கட்டங்களாக அதாவது, செப்டம்பர் 20, 27-ம்தேதிகளிலும், அக்டோபர் 4 மற்றும் 11-ம்தேதிகள் ஆகிய 4 தேதிகளில் இந்த ஆன்மிகப் பயணம் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் :

* இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

* 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்

* ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

* வருமான சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்

* போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்று

* ஆதார் கார்டு நகல்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்த முதியோர்கள் இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் சென்று பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட வருமான சான்றிதழ், ஆதார் நகல், போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுகளையும் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள், தகுதி சான்று ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிப்படும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிந்து கொள்ள இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனக்கூறப்பட்டுள்ளது. ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கு இலவசமாக ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *