தமிழ்நாட்டில் கண்ணன் என்று அனைவராலும் பிரியத்துடன் அழைக்கப்படும் கிருஷ்ணர், வட மாநிலங்களில் கண்ணையா என்று அழைக்கப்படுகிறார்.
மகாவிஷ்ணு உலக நலனுக்காக எடுத்த அவதாரங்களில் 9-வது அவதாரமே கிருஷ்ணா அவதாரமாகும்.
கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.
கிருஷ்ணர் தன்னுடைய இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம்.
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற “கீதகோவிந்தம்”, “ஸ்ரீமந் நாராயணீயம்”, “கிருஷ்ண கர்ணாம்ருதம்” ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.
பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரதானமாக நடைபெறும்.
சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் ‘கிருஷ்ண ஜெயந்தியை அஷ்டமி ரோகிணி’ என்று அழைக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணருக்கு ஸ்ரீநாத்ஜீ என்று பெயர். ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியமாக பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயாசம், நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.
கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை “ராசலீலா” என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.
குஜராத்தில் கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா’ என்ற நாட்டியம் மிகவும் பிரபலம். நீராடும் கோபி யர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.
கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்- சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும், பண்டரி புரத்தை நாத பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.
குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம் பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.
வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் உள்ள பகவான் கிருஷ்ணர் சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.
மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்’ என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தப் புவியில்,மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் தங்களுக்கு இடப்பட்ட கடமைகளை முழுமையாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும். இந்த கருத்தை தான் பகவான் பகவத்கீதை மூலம் நம் ஒவ்வொருவருக்கும் உணர்த்துகிறார்.
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.