நவ.4-ஆம் தேதி 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஸ் / Schedule of 10th and 12th class public exams on November 4th: Anbil Mahesh
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இதனை தெரிவித்தார்.
வரும் நவம்பர் 4-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
கூட்டத்தின் நிறைவில் அன்றைய தினமே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று சென்னையில் அன்பில் மகேஸ் கூறினார்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு அட்டவணை நவம்பா் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் இதனை உறுதி செய்திருக்கிறார்.
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. மாணவா்கள் தோ்வுக்கு தயாராகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) பொதுத் தோ்வு அட்டவணை அக்டோபா் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் தோ்வு அட்டவணை நவம்பா் முதல் வாரத்தில் வெளியாகிறது.
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு கால அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி பெற்று, தோ்வுக்கால அட்டவணையை நவம்பா் 4-ஆம் தேதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு தோ்வு தேதிகள் முடிவு வெளியாகும் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

