6 மாதங்களுக்கும் மேலாக வெளியிடப்படாத TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள்
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தேர்வெழுதியோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குரூப் 2 பணிகளுக்கான ஆள்களை நியமிக்கும் செயல்முறை சுமார் 5 ஆண்டுகளாக தாமதமாகி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தேர்வெழுதியோருக்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மொத்தமாக 58,081 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர், அவர்களில் 57,093 பேர் தேர்வெழுதினார்கள். நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தெரிகிறது.
கடைசியாக, கடந்த 2016 ஆம் ஆண்டுதான் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தேர்வு தாமதமானதாக அரசு வேலைக்காக படித்து வரும் இளைஞர்கள் தெரிவித்தனர். .. இந்தியாவில் மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் பற்றி மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன் இந்த நிலையில்தான், நடப்பாண்டில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. குரூப் 2 தேர்வெழுதிவிட்டு காத்திருக்கும் இளைஞர்கள் இது பற்றி கூறுகையில், முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பரில் அறிவிக்கப்பட வேண்டியது.
ஆனால், டிஎன்பிஎஸ்சி திடீரென தேர்வு முடிவுகள் வெளியீட்டை டிசம்பருக்கு ஒத்திவைத்துள்ளது. எந்த அளவுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதமாகிறதோ, அது எங்களது வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுத்தும் என்கிறார்கள். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்ற முதன்மைத் தேர்வின்போது, தமிழ்த் தாள் தேர்வில், கேள்வித்தாளில் இருந்த வரிசை எண், தேர்வர்களின் எண்ணுடன் பொருந்தாமல் இருந்ததால், தேர்வு தாமதமாக நடைபெற்றது. பல குளறுபடிகளுடன் நடந்து முடிந்த இந்தத் தேர்வின் முடிவுகளுக்காக தேர்வெழுதிய 57,093 பேரும் காத்திருக்கிறார்கள்.