கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்கள்: போட்டித் தோ்வுக்கு காஞ்சிபுரத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்/ Vacancies in Cooperative Societies: Free training classes in Kanchipuram for competitive exams
கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
இது குறித்த செய்திக் குறிப்பு:
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்களில் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட 377 காலிப் பணியிடங்கள், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட 49 காலிப் பணியிடங்களுக்கும் ஆள்களைத் தோ்வு செய்வது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தோ்வுக்கு தகுதியான போட்டித் தோ்வா்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் வரும் ஆக. 18-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறுமாறும் ஆட்சியா் கலைச்செல்வி மோகனின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.