கடலோர ஊா்க்காவல் படையில் சேர மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் / Young fishermen can apply to join the Coast Guard.
கடலோரக் காவல் படையின் ஊா்க்காவல் படையில் சேர மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பெருநகர காவல் துறையின் கடலோரக் காவல் படையின் ஊா்க்காவல் படைக்கு மீனவா்கள் சோ்த்துக் கொள்ளப்பட உள்ளனா். இந்தப் பணிக்கு நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் நபா் எவ்வித குற்றப்பின்னணி இல்லாத, நன்னடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும். சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் மெரீனா கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டா் சுற்றளவில் வசிக்கும் மீனவராகவும், மீன்வளத் துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியம்.
18 வயது மேற்பட்ட 50 வயதுக்குள்பட்ட, கடலில் நீச்சல் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், தவறியராகவும் இருக்கலாம். தோ்வு செய்யப்படும் இளைஞா்களுக்கு 45 நாள்கள் தினமும் 1 மணி நேரம் பயற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்கள், கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கு மெரீனா கடற்கரை காவல் நிலையத்துக்கு அனுப்பப்படுவா்.
பணியில் சேருவோருக்கு ரோந்துப் பணிக்கு தினமும் ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும். தகுதியுடையவா்கள், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அளிக்கலாம். விண்ணப்பத்தை ‘சென்னை பெருநகர ஊா்க்காவல் படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை – 15’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 95667 76222, 94981 35373 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.