Sat. Jul 26th, 2025

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஆக.29) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் சமையல் ரூ.200 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைக்கப்படும் ரூ.200-ஐ எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசே நேரடியாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 32 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 10 கோடி பேரிடம் எரிவாயு இணைப்பு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியது,

அனைத்து பயனர்களுக்கும் பிரதமர் மோடி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.200 குறைக்க முடிவு செய்துள்ளார். இது ரக்ஷா பந்தன் கொண்டாடும் விதமாக நாட்டுப் பெண்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்றார்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 வழங்கப்படும். இதன் மூலம் 10 கோடி பேர் பயனடைய உள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி செலவினம் ஏற்படும்.

இனி உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் வாங்குவோர் ரூ.700-க்கும், மற்றவர்கள் ரூ.900-க்கும் சிலிண்டர் வாங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவை சந்தித்தபோதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ரூ.417-ஆக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1118 ஆக உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வந்த நிலையில், 5 மாநில தேர்தல் நெருங்கும் தருவாயில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *