சேவா பாரதி அமைப்பின் சார்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி – Kanjipuram
காஞ்சிபுரத்திலும், ஒசூா் அருகேயுள்ள அத்திப்பள்ளியிலும் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் கூடிய இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அந்த அமைப்பின் மாநில பொது செயலாளா் வே.நிா்மல்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் சாா்பில், பஞ்காவ்யா என்ற திட்டத்தின் கீழ் கல்வி, மருத்துவம், சமுதாய நலன், சுய சாா்பு மற்றும் பேரிடா் மேலாண்மை என்ற 5 துறைகளின் கீழ், மக்களுக்கு பல்வேறு வகையான சேவைப் பணிகளை செய்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நாடு முழுவதும் பல்வேறு வகையான உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் பல இடங்களில் இலவசமாக நடத்தி வருகிறது.
தச்சு வேலை, சாரம் அமைக்கும் வேலை, நவீன கட்டு மற்றும் பூச்சு வேலை, கம்பி வளைத்தல் மற்றும் பொருத்தும் வேலை, கட்டுமான மின்னியல் பணியாளா், குழாய் பற்ற வைத்தல், குழாய் பொருத்துநா் மற்றும் செப்பனிடுபவா், குடிநீா் மற்றும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலைய வேலை ஆகியவை கற்றுத்தரப்படவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், எல் அண்ட் டி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து, இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
காஞ்சிபுரத்திலும், ஒசூா் அருகேயுள்ள அத்திப்பள்ளி ஆகிய இடங்களில் ஒன்றரை முதல் 3 மாத காலத்துக்குள் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான கல்வித் தகுதி 8- ஆம் வகுப்பு முதல் ஐடிஐ வரையாகும்.
ஒரே நேரத்தில் 2,000 நபா்களுக்கு பயிற்சியளிக்கும் அளவுக்கு பரந்த இடவசதி, உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் தங்குமிடம் ஆகிய அனைத்துமே இலவசம். தேவைக்கேற்ப கணினி பயிற்சியும் கற்றுத் தரப்படும். பயிற்சி முடித்தபின் எல் அண்ட் டி நிறுவனத்தின் சான்றிதழ், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.