பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களில், பாட நூல்களில்உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது.
இதற்குத் தீர்வுகாணும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.
அதன் முன்னோட்டமாக 2022-2023ம் கல்வியாண்டில் சில மாவட்டங்களில் காலாண்டு, அரையாண்டு வினாத்தாள்கள் பொது முறையில் வடிவமைக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் பொது வினாத்தாள் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு பொது வினாத்தாள் முறையில் நடத்தப்படுகிறது. அதற்கான தேர்வுகால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.
6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19 முதல் 27ம் தேதி வரை காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் நடைபெறும். 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15 முதல் 27ம் தேதி வரை நடத்தப்படும். தேர்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை இருந்தால், 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, அதை பதிவு செய்யவேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும், வேறொரு பள்ளியின் எமிஸ் கணக்கைப் பயன்படுத்தி வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்யக்கூடாது. தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் இருந்தால், அதன் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவித்து, உரிய ஆலோசனைகளை பெறவேண்டும் என்பன போன்ற அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.