தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ்.ஐ பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வு – 2023க்கான அறிவிக்கை 05.05.2023 மற்றும் 23.05.2023 அன்று வெளியிடப்பட்டது. இதில் சார்பு ஆய்வாளர் தாலுகா, ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை ஆகிய பணிகளுக்கு 621 மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு 129 உட்பட மொத்தம் 750 (ஆண்கள் -559, பெண்கள்- 191) காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு மொத்தம் 1,86,722 (ஆண்கள்- 1,45,804 பெண்கள்- 40,885 மற்றும் திருநங்ககைகள் – 33) விண்ணப்பித்திருந்தனர். 26.08.2023 அன்று பொது விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு 33 மாவட்ட/ மாநகர மையங்களில் நடைபெற்றது. 27.08.2023 அன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை விண்ணப்பதாரர்களுக்கான துறை தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது. சுமார் 80 சதவீத விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட தேர்வுகளில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு முடிவுகள் சுமார் ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.